Tuesday, March 2, 2021
அப்பா
Monday, March 1, 2021
கொரோனா
நெருங்கிய உறவு ஒன்று விஷம் அருந்தி வாழ்வை முடித்துக் கொண்டது மற்றும் ஒரு சின்னத் திரை நடிகை தற்கொலையை எல்லாம் கேட்டு இதை சொல்கிறேன்.
இந்த வருடம் எதிர்பாராத பேரிடர்கள் நிறைய. கொரோனா, வருமானம் இழப்பு, புயல், வெள்ளம், வசிப்பிடம் இழப்பு இன்னும் ஏகப்பட்ட இழப்புகள் இவையெல்லாமே பேரிழப்புகள் தான்.
இவற்றோடு முக்கியமான இழப்பு நம் உடனிருந்த சிலர் நோய் காரணமாகவோ தற்கொலைகள் காரணமாகவோ நம்மை விட்டு பிரிகையில ஏற்படும் அதிர்வலைகள் இன்னமும் நம்மை அழுத்தவும் செய்கிறது.
நான் ஒரு ஒர்த்லெஸ், கையாலாகாதவள்/ன் என்ற எண்ணம் மிகப் பலரை எண்ணத் தோற்றுவிக்கிறது சூழ்நிலைகள். கூச்சமின்றி சொல்கிறேன், இந்த கொரோனா தாக்குதலுக்கு பிறகு என்னை மிகவும் ஆக்கிரமித்தது இந்த எண்ணம்.
ஆனால் இந்த உலகில் நீ இரண்டு கொம்புடன் பிறக்கவில்லை. ஜஸ்ட் மனிதப் பதர்தான் நீ என்று ஒட்டுமொத்த மனித குலத்தையும் பார்த்து கெக்கலித்து சிரிக்கிறது கோவிட்19.
இன்று மனுக்குலம் உயிருடன் இருந்தால் போதும் என்று மிரட்டிப் பணிய வைத்து இருக்கிறது ஒரு துக்கிளியூண்டு உயிரி.
ஒன்று சொல்கிறேன். அறிவுரை அல்ல. எனக்கே நான் சொல்லிக் கொண்டதை உங்களுக்கும் சொல்கிறேன். இன்றைய தேதியில் நம் உடல் நலத்தை பேணி நாம் உயிருடன் இருப்பது மிக முக்கியம். வைரஸ் மட்டுமின்றி இயற்கை கூட நம்மை உரசிப் பார்க்கும் காலத்தில் தற்கொலைகள் எவ்விதத்திலும் தீர்வாகாது.
எழுபது வயது கிழமெல்லாம் விரல் சொடுக்கி 'மாத்தணும், எல்லாத்தையும் மாத்தணும்' என்று நம்முன் நிற்க காண்கையில் நாம் நமது சொந்த வாழ்க்கையை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டு வாழ எந்த விதத்தில் இவ்வுலகில் வாழத் தகுதியில்லாது போவோம்.
வலியது வாழும். இதுதான் உயிரியல் தத்துவம். அதனால் நாம் மனதாலும் உடலாலும் வலுவேற்றி உயிருடன் இருப்போம் முதலில்.
வீரவசனம் பேச இன்னும் நிறைய காலம் கிடைக்கும்.
முதல் புடவை
இன்றைக்கு என்னவோ அப்பாவின் நினைவு அதிகமாய் இருக்கின்றது.
அது ஒரு டீனேஜ் காலம். எதன் காரணமாகவோ அந்த வருடம் கிறிஸ்துமஸ் புத்தாடை கடைசி வரை எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. தமபி தங்கை ஆடைகள் ரெடி. எனக்கு மட்டும் இல்லாமல் போனதன் காரணம் ஏனென்று தெரியவில்லை.
இருபத்தி நான்கு தேதி வரை ட்ரெஸ் வரவில்லை. அப்பா திருப்பூரில் கடை வைத்திருந்தார். அம்மாவும் அன்றைக்கு அங்கே போயிருநதார். இரவு ஒன்பது மணி வரையிலும் இருவரும் வரவில்லை.
மனம் சோர்ந்து போய் நெஞ்சம் வெடிக்கும் துக்கத்தில் அமர்ந்து இருந்தேன். ஏனெனில் ரெடிமேட் ஆடைகள் என்றாலும் கடைகள் அடைத்து விடுவார்களே.
தாயும் தகப்பனும் வந்தார்கள் பத்து மணிக்கு கையில் திருபுவனம் பட்டுப் புடவை பையுடன். புடவையின் நிறமும் டிஸலனும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் அதற்கான ஜாக்கெட் புடவையுடன் இருக்கிறது தைக்காமல்.
இரவு பதினொன்றரைக்கு சர்சசுக்கு போக வேண்டும். அழுகை கண்ணில் முடடிக் கொண்டு நிற்கிறது. அப்பாவோ என்னைக் கவனியாமல் கூலாக குளித்து விட்டு வந்து வழக்கப்படி தரையில் அமர்ந்தார்.
என்னை அந்த புடவை டப்பாவை எடுத்த தரச் சொன்னார். எனக்கோ அந்த புடவை பிடிககவுமில்லை. இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன என்ற மனநிலையில் இருந்தேன். அப்பாவின் செல்ல மகளாயிற்றே நான்.
முதலில் டைம்பீஸ் எடுத்து பக்கத்தில் வைக்கச் சொன்னார். அடுத்து புடவையும் சிசரும் கேட்டார். ஜாக்கெட் வெட்டுவதற்குள் தையல் மெஷினில் நூல் போடச் சொன்னார். அவர் கேட்டது ஆக முப்பது நிமிடம்.
பத்தரை மணி முதல் வெறும் இருபது நிமிடத்தில் ஜாக்கெட் ரெடி. அடுத்த பதினைந்து நிமிடம் அம்மாவுக்கு ஊக் கட்ட. சிறப்பாக புத்தாடையுடன் அன்றைக்கு இரவு சர்ச்சுக்கு போனோம்
அப்படியாக எனது முதல் புடவையின் கதை, கிறிஸ்துமஸ் புத்தாடை கதை,அப்பாவின் தொழில்நுட்ப திறன் கதை என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
பின் குறிப்பு: அந்த புடவை உடுத்திய நாளே காய்ச்சலில் விழுந்தேன். அடுத்த பத்து நாட்கள் தலை துக்க முடியாத படிக்கு இருந்து கடைசியில் திருஷ்டி சுத்திப் போட்டுதான் நல்லா ஆச்சு. என் அம்மா இப்போது இதை நினைவூட்டினார் 🤪🤪.
அவ்ளோ அழகு நான். காக்கைக்கு தன் குஞ்சு பழமொழி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல
Merry Christmas
பொங்கலோ பொங்கல்
என்னுடைய சிறு வயது காலங்களில் கோவையில்தான் இருந்தோம். அப்போது பொங்கல் என்பது மிகவும் கொண்டாடப் படும் விஷயம். வீடுகளை வெள்ளை அடித்து சாணமிட்டு மெழுகி மாக்கோலம் போட்டு வைப்பார்கள். சிமெண்ட் தரைகளில் பெயிண்ட்டால் கலர் கலர் கோலம் போட்டும் வைப்பார்கள்.
முக்கியமாக அனைத்து வீடுகளும் இதே கெட்டப்பில் இருக்கும். மற்றும் எல்லா வீடுகளிலும் வேப்பிலை கொத்து சொருகி வைப்பார்கள், அதில் ஆவரம்பூ, பூளைப்பூ எல்லாம் சேர்ந்திருக்கும். வீடுகளில் வெளியே காணக் கூடியவைகள் இவை. வீட்டுக்குள் பொங்கல் படையலிட்டு சாமி கும்பிடுவார்கள் என்பதை தவிர தெரியாது.
சேலத்தில் ஒரு ஐந்து வருடங்கள் இருந்தோம். அங்கு பொங்கல் என்பது பெரும் பண்டிகை. எல்லோரும் பொங்கல் பணம் பெறுவர் அவரவர் தொழிலகங்களில்.
புதுச்சட்டை அணிவர். வண்டி வேடிக்கை என்பது மிகவும் பிரசித்தி. வண்ண வண்ண வேடமிட்டு நேர்ச்சை செலுத்துவர் கோவில்களில்.
இதோ சென்னையில் பத்து பந்தினைந்து வருடங்கள். பொங்கல் கொண்டாட்டம் என்றால் இவர்களுக்கு டயர் எரித்து மத்தளக்கொட்டு கொட்டி ....... என்ன்னத்தை சொல்ல.
சரி சரி எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
முதல் காதல்
பத்தொன்பது வயது வரை கொண்டிருந்த வைராக்கியம் அம்மா அப்பா பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்து கொள்வது என்பது. அது பெற்றவர்களுக்கு செய்யும் மரியாதை என்று நம்பின எனக்கும் காதல் வந்தது.
மலையாளியை மணக்கக் கூடாது என்ற சபதத்துக்கு ஏற்ப தமிழ் இளைஞர் மனதை ஆட்கொண்டார். இரண்டு வருடங்கள் சந்திப்புகள் சினிமாக்கள் என்று ஓடிய தெய்வீக காதலை வீட்டில் சொன்னேன்.
(அப்பவே நாங்க அப்பிடி. நான்தான் வீட்டில் முதலில் போட்டு உடைத்தேன்) அம்மா பத்து நாட்கள் மண்டகப் படி பூஜை நடத்தியும் நான் கொண்ட கொள்கையில் மாறாது போகவே அப்பாவிடம் தகவல் பரிமாற்றம் செய்யப்பட அடுத்த வடிவம் பெற்றது என் தெய்வீக காதல்
பெற்றவர்களின் கூட்டு ஆலோசனையின் முடிவில் காதலனிடம் திருமணம் குறித்து பேச சென்றனர்.
அரிய தகவல் பெறப்பட்ட தினம் இன்று. அவருக்கு மலையாள பெண்ணை மணமுடிக்க எண்ணமே இல்லை என்பது தான் அது.
காதலர் தினமாவது பொடலங்கா தினமாவது. குடும்பமாக அவமானம் பட்ட தினம்.
மன்னிச்சுடுங்க லில்லி & ஜேம்ஸ்
கார்
கார்......
கஜினி மொட்டைமாடி கல்பனா சொன்ன மாதிரி எங்கப்பாவும் ஒரு அம்பாஸடர் மற்றும் மூன்று ஆட்டோவுக்கு முதலாளியாக இருந்தார். நான் நான்காவது படிக்கும்போது ஒரு சிட்பண்ட் காரன் ஏமாத்தின பொழுது அனைத்தையும் விற்று ஒரு லாரி நிறைய வீட்டு சாமான்கள் மற்றும் அம்பது பவுன் நகையுடனும் திருச்சியில் செட்டில் ஆனோம்.
அன்று முதல் 2004ல் அப்பா மரணிக்கும் வரை கார் வெறும் கனவாகவே இருந்தது அவருக்கு.
ஆனால் எனது கார் கனவு மாருதி வந்த பிறகுதான். அதன் ஒவ்வோர் மாடலும் என்னால் கூர்ந்து நோக்கப் படும். ஆனால் அதில் கால் வைக்க கூட நேரம் வரவில்லை. 2000ம் ஆண்டு வாங்க வேண்டும் என்று வைத்த கோல் 2002, 2004, 2005 2006 என்று போனது.
கடைசியில் 2007 அக்டோபரில் ஸென் எஸ்டிலோ சிவப்பு நிறத்தில் வாங்கியபோது பெருமையில் பூரித்துப் போறேன். கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வருட கனவு நனவான தினம் அல்லவா அது.
போட்டோ இருந்தது. தேடிக் கொண்டு இருக்கிறேன். அது ஒரு குட்டி கார். அதில் பவர் ஸ்டீயரிங் அது இது என்று ஹை என்ட் மாடல். பெருமிதம் பொங்க ராமச்சந்திரன் ரிச்சர்ட் மற்றும் லெனர்ட் நான் என அனைவரும் டிரைவிங் ஸ்கூல் போய் பழகி லைசென்ஸ் வாங்கினோம்.
அப்படி பல சிறப்பு வாய்ந்த கார் அதன் பிறகு 2014ல் புத்தம்புது ஃபியட் புன்டோ எடுத்த போது மாருதி ரொம்பவும் பின் தங்கி இருப்பது உணர்ந்தோம். ஆயினும் மாருதி மீது கொண்ட அன்பில் துளிகூட குறையில்லை.
2015ல் கொள்ளை நோய் பன்றிக் காய்ச்சலால் சாகப் பிழைக்க கிடந்த போது துளி தயக்கமின்றி அனைத்து நகைகளையும் அடமானம் வைத்து பணம் கொடுத்து உதவின மருமகள் (நானெல்லாம் கொடுத்து வைத்த மாமியாராக்கும்)
நகையை திருப்பித் தராதது குறித்து மனது சிரமப் பட்ட என் கணவர் எங்கள் கனவு காரை olx தளத்தில் போட்டு இரண்டே நாளில் விற்க துணிந்தார்.
ஒரு பழனி காரர் ரெண்டு டப்பா பஞ்சாமிர்தம் உடன் கேஷ் கொடுத்து வாங்கிப் போனார். நானோ கணவரோ ரோட்டுக்கு போய் பார்க்கவே இல்லை. . அதன் வடுக்களை இப்போதும் சிவப்பு எஸ்டிலோ எங்கேனும் பார்த்தால் தடவிக் கொள்வோம்.
#உண்மையில்_அது_பெரும்_துயரம்
கல்வி
படிப்பு.
அம்மா கல்வியை நம்பினார். அது மட்டுமே எங்கள் போல வர்க்கத்துக்கு முன்னேற்றத்தை தரும் என்பதை மிகவும் நம்பினார். எங்களை படிக்க வற்புறுத்தினார்.
எங்கள் சுழி அதை சரியாக புரிந்து கொள்ள விடவில்லை. அம்மாவை இந்த விஷயத்தில் நாங்கள் மூவருமே வெறுத்தோம்.
ஆயினும் எங்களை எங்கள் விருப்பங்களை மீறி படிக்க வைத்து ஜெயிக்க வைத்தார். உண்மையில் அவர் சொன்னது கேட்டு வளர்ந்து இருந்தால் ஒரு ஐஏஎஸ் ஐபிஎஸ் அளவுக்கு வளர்ந்து விட்டிருப்பார் என்று இப்போது தோன்றுகிறது.
ஆனாலும் நாங்கள் மூவருமே இன்று இந்த நிலைமையில் இருக்க காரணம் அம்மா கடினமான முறையை கையாண்டு கொடுத்த கல்விதான் கரணம்.
இன்று கல்வி மதிப்பெண் வாங்கும் ஒரு கருவி என்று கருதப் படுகிறது. எல்லாருக்கும் எல்லாத்திலும் முதல் இடத்துக்கு வர வேண்டும் என்பதே குறி. அதனால் பயன் என்ன என்றால் ஒரு மண்ணும் இல்லை.
பிறகேன் இத்தனை அழுத்தம் அது குறித்து. ஏன் பேத்தி மூணரை வயசாகிறது. லண்டனில் இருக்கிறாள். என்ன வேண்டுமானாலும் படிக்கட்டும். எவ்வளவு மார்க் வேணுமானாலும் வாங்கட்டும்.
கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு என்று புகுந்து புறப்பட்டு வர வேண்டும் என்பது என் ஆசை. என் கனவுகளை மகன்கள் சாதித்துக் கொடுத்துள்ளனர்.
அடுத்த இலக்கு அடுத்த தலைமுறை நோக்கி என் அம்மாவின் வழியில்...❤️
சந்தேகம்
சந்தேகம்...
உறவுகளை அசால்டாக பிய்த்து எறிந்து விட்டு நம்மை கதற வைக்கும் ஓர் பெருநோய்.
சந்தேகம் என்று வந்து விட்டால் அங்கிருந்து அகன்று விடுதல் நல்லது. அய்யோ நான் அப்படி இல்லை இப்படி என்று நிரூபிக்க முயல்வது என்றால் அது தினசரி தொடர் என்பதை காலம் தெரிவிக்கும்.
எனக்கு பெண்களிடம் பழக உள்ளூர பயம் இன்று வரை. என்னவோ ஆண்கள் என்னிடம் பெண்கள் அளவுக்கு குரூரமாக நடந்து கொண்டது இல்லை.
நான் அசிங்கப் பட்டது அவமானப் பட்டது எல்லாமே நூற்றுக்கு நூறு சதவீதம் பெண்களால் தான்.
பெற்ற தாய் முதல் கூடப் பிறந்த சகோதரி அத்தை பாட்டி அடுத்த வீட்டுக் காரி என்று அனைத்து பெண்களாலும் தவறாகவே புரிந்து கொள்ளப் பட்ட நிலையில் சுப்பாத்தாள் என்ற எழுவது வயது கிழவி முப்பது வயதில் இருந்த எனக்கு தோழி ஆனார். பிறகான காலத்தில் என் மருமகள் என வெகுசிலர்.
இன்று யோசித்துப் பார்க்கையில் நான் சக பெண்களை எனது தைரியமான செயல்களால் மிரட்டி இருக்கிறேன் அந்த காலத்தில் என்பதை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது.
பால்ய பருவத்தில் நான் தனிமை விரும்பி. அந்த தனிமை நிறைய சிந்திக்க தூண்டியது. சரி தவறுகளை எடை போட துணிந்தது. எல்லோரும் சரி என்று சொன்ன பல விஷயங்கள் சரியல்ல என்று மனதுக்குப் பட்டது.
இருபாலர் பள்ளியில் படித்த என்னிடம் என் அம்மா பசங்க கூட பேசக் கூடாது என்று போட்ட நிபந்தனைகள் பத்தாம் பசலித் தனமாக தோன்றியது. பேசினால் என்னதான் ஆகும் என்ற கேள்விக்கு விடை சொல்லும் பெரிய மனது தாய் முதல் அனைத்து பெண்களுக்கும் இல்லை, அது எனது அடங்கா மாரித் தனமாகவே புரிந்து கொள்ள பட்டது.
இன்றைய பெண்களுக்கு எவ்வளவு சுதந்திரம் கிடைத்து இருக்கிறது என்பது இன்னமும் தெரியவில்லை. போக வேண்டிய தூரம் அதிகம்தான் ஆயினும் நாங்கள் எங்கள் முன்னோடி பெண்கள் எலலாம் கடந்து வந்த பாதை மிக மிகக் கடினமானதாக இருந்தது.
எவராவது சந்தேகப் பட்டால் மனதுக்கு தகுந்தபடி சிலமுறை மன்னிக்கலாம். சிலமுறை புரிய வைக்கலாம். ஆனால் அதையே வாழ்க்கை முழுவதும் செய்ய இயலாது.
அனுபவத்தில் சொல்கிறேன், யாரையும் சந்தேகப் படுமுன் கொஞ்சம் நம்பிக்கை வைக்க முயற்சி செய்யுங்கள்.
என் அப்பாவுக்கு என் மேல் பெரும் நம்பிக்கை என்று நான் நம்பினேன். அதை வலிமைமிக்க ஒன்றாக்க மெனக் கெட்டேனே தவிர கெடுக்க சிறு முயற்சி கூட செய்தது இல்லை. அதன் பிறகு ராமச்சந்திரன் வாழ்க்கையில் கிடைத்த வரம். எவர் என்ன சொன்னாலும் அவருக்கு நம்பிக்கை மிகு தோழியாக அவரருகில் நான்.
உறவுகளை உரமாக்கும் மந்திரம் நம்பிக்கை. முயற்சித்து பார்க்கலாமே.
கறிவேப்பிலை கார ஆத்தா என்ற சுப்பாத்தாள்
கறிவேப்பிலை கார ஆத்தா என்ற சுப்பாத்தாள்
1997ல் ஒரு கடினமான சூழ்நிலையில் இரு மகன்களுடன் அம்மா வசித்து வந்த கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையம் வீட்டில் வாசம்.
பிறந்தது முதல் நகரத்து வாழ்க்கை என்றே பழகிப்போன தால் கிராமத்தனமான இந்த ஊர் கொஞ்சம் அன்னியமாகத் தான் தெரிந்தது.
கழிப்பறை எல்லாம் கிடையாது. காட்டுக்குத் தான் போக வேண்டும். பேருந்து நிலையம் ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். சாதிக் கட்டுப் பாடுகள் நிறைய.
ஆண்களுக்கு வீட்டுக்கே வந்து முடிதிருத்தம் செய்து எண்ணை மாலிஷ் செய்து போக ஒருவர் உண்டு.
இப்படியான ஊரில் சுப்பாத்தாள் என்கிற ஆத்தா வீட்டில் மட்டும் தான் போன் இருந்தது. ஒரு சில தவிர்க்க முடியாத நேரங்களில் அவரிடம் அனுமதி வாங்கி சில போன் கால்கள் செய்வேன். ஆணி அடித்த மாதிரி அருகிலேயே உட்கார்ந்து இருப்பார். மிக எரிச்சலாக இருக்கும்.
எத்தனை நிமிடம் பேசுகிறோமோ அத்தனை ரூபாய் வசூலிப்பார். எல்லோராலும் உருவகப் படுத்தப் பட்ட அதே உருவம்தான் என் மனதிலும் அவர் குறித்து.
அவர் மாடு வைத்து இருந்தார். அதை ஓட்டிக் கொண்டு அவரது சோளக்காட்டுககு தினமும் ஓட்டிப் போவார். காலையில் போனால் அந்தியடங்க வீடு திரும்புவார்.
அப்படி போகையில் மாடு மிதித்து பாதத்தில் காயம் ஏற்பட்டது.
ஆத்தா பால் தயிர் எல்லாம் விலைக்கு கொடுக்கும். சனிக்கிழமைகளில் கறிவேப்பிலை ஒடித்து கொண்டு போய் வடவள்ளி சந்தையில் விற்கும். அதனால் இவை ஏதும் தேவைப் பட்டால் அம்மா என்னை போய் வாங்கி வரச் சொல்லுவார்கள். என் அம்மாவுக்கு இவரை பிடிக்கவே பிடிக்காது.
இப்படியாக ஒரு மாலை நேரத்தில் ஆத்தாவிடம் என்னவோ வாங்கப் போனபோது. தனது பாதத்தில் சிரமப் பட்டு என்னவோ பச்சிலை வைத்து கட்டிக் கொண்டிருந்தார்.
மனதுக்கு வலித்தது. தனியோரு மனுஷியாக அவ்வளவு பெரிய வீட்டில் தனிவாசம். அன்று முதல் நான் தினமும் காலை மாலை ஆஜராகி விடுவேன். சுடுதண்ணியில் காயத்தை கழுவி சுத்தம் செய்து ஆத்தா வைத்திருக்கும் பச்சிலை விழுதை வைத்து கட்டி விடுவேன்.
காயம் ஆற ஒன்றிரண்டு மாதம் ஆனது. கடைசி வரை நான் தான் தாதி அவருக்கு. இடையில் வேலை அமைந்து போய் வர ஆரம்பித்தேன். ஆயினும் மருத்துவம் நிற்கவில்லை.
ஆத்தா வீட்டு ரோஜா அழகாக இருக்கும். அதில் பூக்கும் அத்தனை பூக்களும் எனக்குத்தான். என்னிடம் கறாராக பைசா வாங்கி விடும். ஆனால் காசே கொடுத்தாலும் வேறு யாருக்கும் ஒற்றை பூ தராது.
கோவை நான் பிறந்து வளர்ந்த ஊர்தான் எனினும் குளிர் காலத்தில் மிகவும் படுத்தும். சளித் தொல்லை மற்றும் வீசிங்கால் அவதிப் படுவேன். அக்காலத்தில் எனக்கு வேண்டி மருந்துக் குழம்பு அல்லது கொள்ளு ரசம் என்று ஏதாவது அரை டம்ளர் கொண்டு வந்து தரும். "சீலாத்தாளுக்கு குடு" என்று சொல்லி விட்டுப் போகும் ஆத்தாவை என் அம்மா முரைப்பார்கள். (வீட்டில் என் பெயர் ஷீலா. என்னையும் கவுண்டச்சி போல சீலாத்தாள் என் அழைக்க வைத்தது அவரது அன்பு)
சில நேரங்களில் கேஸ் சிலிண்டர் வந்து விடும் பைசா இருக்காது. ஆத்தாவிடம் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன் பலமுறை. இதைப் பார்த்து ஊர்க்காரர்கள் மூக்கில் விரல் வைப்பர். அவர்களை பொறுத்து வரை இவர் எச்சில் கையால் காக்காய் கூட விரட்டாத கருமி.
குடும்ப வாழ்க்கை கடினமான நிலையை கடந்து கொண்டிருந்த நேரம் அது. ஒருநாள் மனதின் பாரம் தாங்காமல் ஆத்தாவிடம் அனைத்தையும் பகிர ஆத்தா அவ்வளவு தைரியம் சொன்னார். அந்த முதிர் வயதில் அவ்வளவு அட்வான்ஸ்டாக இருந்தார்.
தனது கணவர் கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போனதாகவும் அக்காலத்தில் எவர் தயவுமினறி அவரது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினது என்று பல துயரங்களை பகிர்ந்து கொண்டபோது எங்கள் உறவு இறுக்கமானது. பெண்கள் குறித்து அவரது கண்ணோட்டம் விசாலமாக இருந்தது.
2000ல் நான் சென்னை வந்தேன். கோவை வீட்டுக்கு காம்பவுண்ட் சுவர் கட்ட இருபத்தி ஐந்து ஆயிரம் கொடுத்து உதவியது ஆத்தா தான். என்ன நம்பிக்கை என் மீது. அன்று பவுன் வெறும் ரெண்டாயிரத்தி ஐநூறு தான்.
2004ல் அவர் பேரனுக்கு ஸ்டான்லியில் மெடிகல் சீட் கிடைத்ததும் வார இறுதியில் எங்கள் வீட்டில் தான் தங்குவான்.
2010 வாக்கில் பல இன்னல்களை சந்தித்த அந்த ஆத்மா போய் சேர்ந்தது எனக்கு ரொம்ப பிறகுதான் தெரிந்தது.
என் ஆளுமையை வடிவமைத்த சில இன்ஃப்ளூயென்ஸர்களில் ஒருத்தி இந்த சுப்பாத்தாள்.❤️❤️
என் ஏதேன் தோட்டம்
கோவை சிங்காநல்லூர் வடக்கு அக்ரஹாரத்தில் வீடு வைத்து இருந்தோம். வீடு என்னவோ நானூறு அல்லது நானூற்று ஐம்பது சதுர அடிதான் இருக்கும். ஆனால் நிலம் ஐந்து சென்ட் என் பத்திரம் சொல்லும். வீட்டுக்கு பின்புறம் பெரிய விவசாய கிணறு மற்றும் அதை சுற்றி பத்தடி நிலம் அவரவர் அனுபவித்து கொள்ளலாம்.
அப்படி கொஞ்சம் நிலம் என எங்கள் தோட்டமே ஐந்து சென்ட் இருக்கும். ராமச்சந்திரன் கைக்கு செடிகொடிகள் ஓகோ என்று வளரும். அவரும் வீட்டை சுற்றி நாலு தென்னை, ரெண்டு கறிவேப்பிலை, ரெண்டு கொய்யா, ஒரு பப்பாளி,ஒரு மருதாணி, நாலு வாழைமரம் என்று வீட்டை பசுமையாக பார்த்துக் கொள்வார்.
இது போக ஒரு பக்கம் எழுவது அடி நீளத்துக்கு கல்நட்டு கம்பி வேலி போட்டு இருந்தோம். அத நீளத்துக்கு கொடி காய்கள். தோட்டத்தில் முள்ளங்கி கத்திரிக்காய் சௌசௌ என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இவற்றை மேலும் அழகாக்க எங்கள் அம்மா இரண்டு வாத்து வாங்கி விட்டு இருந்தார். நிலத்தில் ஒரு பிளாஸ்டிக் டப்பை பதித்து அதில் நீர் நிரப்பி விடுவார்கள். அதற்குள் இறங்கி நீந்தி குளிக்கும் வாழ்த்துகளை காண கண் கோடி வேண்டும்.
அனைத்துக்கும் மேலாக பாக்ஸர் இனத்தை சேர்ந்த பயமுறுத்தும் முகம் கொண்ட பயந்தாங்கொள்ளி நாய் வேறு.
அப்போது முன்னேரணும் என்ற மந்திரத்தை தவிர வேறெதுவும் சிந்திக்க இயலாத வயது. மேல் சொன்ன எதையும் யாருமே ரசிக்கவில்லை என் குழந்தைகள் தவிர. மரத்தில் ஏறி குரங்குகள் போல பழம் பறித்த அனுபவம் அவர்களுக்கு உண்டு.
இன்று ஒரே ஒரு காய் கிடைத்தாலும் இங்கே பகிர்ந்து குஷிப் படும் நான் அன்று அத்தனை கட்டு கட்டாய் முருங்கை முதல் முறம் நிறைய கிட்டும் கொய்யாப்பழம் கிளை விட்டு நிற்கும் பப்பாளி மரத்தின் அத்தனை கிளைகள் அவ்வளவு பெரிய பப்பாளி என்ற எதிலும் மனம் லயித்தது இல்லை.
திரும்ப அந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்.
ஏதோ ஒரு படத்தில் துலுக்காணம் என்று அறியப்படும் மகாநதி சங்கர் சொல்வது போல் 'அதுக்கு நிலம் வாங்கோணும். மரம் செடி வெக்கோணும். அது எல்லாம் பலன் தரும் வரை உசுரோட இருக்கோணும்'.
Body & Sex
நான் திருமணம் செய்து கொண்டது 1987ம் ஆண்டு. எங்களுக்கு ஒரு பொதுவான நண்பர் சாம் லெனர்ட் கார் என்ற தஞ்சாவூர் வம்சாவளி அமெரிக்கர் ஒரு புத்தகம் பரிசளித்தார்.
வாசிப்பு என்பது ரத்தத்தில் ஊறிப் போன நான் ஆர்வமாக பிரித்து பார்த்தால் Body & Sex என்ற ஆங்கில புத்தகம். அனைத்தும் டொம்மணக்கா படங்கள் நிறைந்த செக்ஸ் முதல் குழந்தை தரித்தல் குழந்தை பிறப்பு என்று விலாவாரியாக அனைத்தையும் பேசின புத்தகம்.
ச்சீய் என்று இரு கைகளாலும் முகத்தை மூடி பிறகு விரலிடுக்கு வழியாக பார்த்து பிறகு படிக்க ஆரம்பித்தேன். உடலுறவு குறித்து ஒரு மண்ணும் தெரியாத எங்களுக்கு பெரிய பைபிள் போல ஆனது.
குழந்தை உண்டான போது அனைத்துக்கும் அதை எடுத்து வாசிப்போம். வாராவாரம் குழந்தை வளர்ச்சி பற்றிய படங்களுடன் கூடிய பாடங்களை வாசித்து பரவசமடைந்தோம்.
முப்பது வருடங்களுக்கு மேலாகிறது. இன்றைக்கும் கூட அது போல ஒரு புத்தகம் யாருக்கும் பரிசளிக்க என்னால் முடியுமா என்பது கேள்விக்குறி தான். அது நமது கேரக்டர் சமபந்தமானதாகி விடும் நம் சமூகத்தில் 🙄🙄
அன்று எந்த பெரியவர்களின் வழிகாட்டலும் இன்றி நானே ராஜா நானே மந்திரி என்ற வாழ்க்கையில் இது போன்றவைகள் வழிகாட்டிகள் ஆயின. ஆனால் இன்றைக்கு பார்ன் ஸைட் முதல் யூடியூப் என்று அத்தனை ஆயிரம் வழிகள் உண்டு நல்லது கெட்டது கற்றுத் தெரிந்து கொள்ள.
இன்றைய உலகம் எனக்கு மிகவும் பிடித்த உலகம். இதற்கு ஏக்கப் பட்ட என் தலைமுறை மனிதர்களின் வெற்றியை இன்றைய தலைமுறை அனுபவிக்கின்றனர் கொண்டாட்டம் ஏதுமின்றி.
ஏனெனில் அவர்கள் கேட்டு பெற்றதில்லை இவ்வாழ்வு. சாதாரணமாக கிடைக்கப் பெற்றது. "தடை அதை உடை" என்றவர்கள் போராடிப் பெறறதுதான் இந்த சமூகம் மற்றும் அது சார்ந்த அறிவியலும்.