இன்றைக்கு என்னவோ அப்பாவின் நினைவு அதிகமாய் இருக்கின்றது.
அது ஒரு டீனேஜ் காலம். எதன் காரணமாகவோ அந்த வருடம் கிறிஸ்துமஸ் புத்தாடை கடைசி வரை எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. தமபி தங்கை ஆடைகள் ரெடி. எனக்கு மட்டும் இல்லாமல் போனதன் காரணம் ஏனென்று தெரியவில்லை.
இருபத்தி நான்கு தேதி வரை ட்ரெஸ் வரவில்லை. அப்பா திருப்பூரில் கடை வைத்திருந்தார். அம்மாவும் அன்றைக்கு அங்கே போயிருநதார். இரவு ஒன்பது மணி வரையிலும் இருவரும் வரவில்லை.
மனம் சோர்ந்து போய் நெஞ்சம் வெடிக்கும் துக்கத்தில் அமர்ந்து இருந்தேன். ஏனெனில் ரெடிமேட் ஆடைகள் என்றாலும் கடைகள் அடைத்து விடுவார்களே.
தாயும் தகப்பனும் வந்தார்கள் பத்து மணிக்கு கையில் திருபுவனம் பட்டுப் புடவை பையுடன். புடவையின் நிறமும் டிஸலனும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் அதற்கான ஜாக்கெட் புடவையுடன் இருக்கிறது தைக்காமல்.
இரவு பதினொன்றரைக்கு சர்சசுக்கு போக வேண்டும். அழுகை கண்ணில் முடடிக் கொண்டு நிற்கிறது. அப்பாவோ என்னைக் கவனியாமல் கூலாக குளித்து விட்டு வந்து வழக்கப்படி தரையில் அமர்ந்தார்.
என்னை அந்த புடவை டப்பாவை எடுத்த தரச் சொன்னார். எனக்கோ அந்த புடவை பிடிககவுமில்லை. இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன என்ற மனநிலையில் இருந்தேன். அப்பாவின் செல்ல மகளாயிற்றே நான்.
முதலில் டைம்பீஸ் எடுத்து பக்கத்தில் வைக்கச் சொன்னார். அடுத்து புடவையும் சிசரும் கேட்டார். ஜாக்கெட் வெட்டுவதற்குள் தையல் மெஷினில் நூல் போடச் சொன்னார். அவர் கேட்டது ஆக முப்பது நிமிடம்.
பத்தரை மணி முதல் வெறும் இருபது நிமிடத்தில் ஜாக்கெட் ரெடி. அடுத்த பதினைந்து நிமிடம் அம்மாவுக்கு ஊக் கட்ட. சிறப்பாக புத்தாடையுடன் அன்றைக்கு இரவு சர்ச்சுக்கு போனோம்
அப்படியாக எனது முதல் புடவையின் கதை, கிறிஸ்துமஸ் புத்தாடை கதை,அப்பாவின் தொழில்நுட்ப திறன் கதை என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
பின் குறிப்பு: அந்த புடவை உடுத்திய நாளே காய்ச்சலில் விழுந்தேன். அடுத்த பத்து நாட்கள் தலை துக்க முடியாத படிக்கு இருந்து கடைசியில் திருஷ்டி சுத்திப் போட்டுதான் நல்லா ஆச்சு. என் அம்மா இப்போது இதை நினைவூட்டினார் 🤪🤪.
அவ்ளோ அழகு நான். காக்கைக்கு தன் குஞ்சு பழமொழி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல
Merry Christmas
No comments:
Post a Comment