Tuesday, March 2, 2021

அப்பா

எந்த நேரத்திலும் போலவே என் அப்பாவை மிஸ் பண்ணுகிறேன் இந்த நாளிலும்.

திருமணம் என்கிற பந்தத்தில் இணைந்த சந்தோஷத்தில் அப்பாவின் அண்மை இழப்பு தெரியவில்லை. பிறகு குழந்தை குட்டி என்கிற கமிட்மென்ட் அப்பா ப்ரயாரிட்டி லிஸ்டில் இல்லை. 

பொருளாதாரத்தை மேம்படுத்த என நான் ஓடிய ஓட்டத்தில் அப்பா திரும்பவும் பின்னுக்குத் தள்ளப்பட்டார். அப்பாவும் ஒடிக் கொண்டிருந்தார் தன்னுடைய கமிட்மென்டுகளுக்காக.

நான் ஒரு நிலையை எத்தியவுடன் அப்பாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அலை ஓய குளிக்க காத்திருந்தவளானேன். கடைசிவருக்கும் அந்த அலை ஓயவேயில்லை.

நிறைய அவமானங்களையும் அவமரியாதைகளையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறேன் அவருக்கு. ஆயினும் ஒரு நாளிலும் அன்பைக்குழைத்து தேன் தடவிய 'மோளே' என்கிற விளியன்றி என்னைப் பெயர் சொல்லிக் கூட அழைத்ததேயில்லை என் அப்பா.

என்னுடய அத்துணை சறுக்கல்களிலும் அரணாய் காத்து நின்ற என் அப்பா. குடும்பமே எனது தான்தோன்றித் தனமான சிலபல முடிவுகளை விமரிசித்தபோதும் என்னை குத்திக் கிழிக்காமல் கூடவே நின்ற என் தகப்பன்

பெருமையுடன் எப்போதும் சொல்வேன் அவருடைய செல்ல மகள் நான் என்று. ஆயினும் அவரும் நானும் சேர்ந்தார்ப் போல ஒரு புகைப்படம் கூட இல்லை என்னிடம். 

2004- மார்ச் இரண்டு முதல் என் வாழ்நாள் முழுக்க குற்றவுணர்வுடன் இருக்கும் படியான மகளாகிப் போனேனே அப்பா

இந்த பதினைந்தாம் நினைவு நாளில் இன்னமும் அதிகதிமாய் உங்கள் இழப்பை உணர்கிறேன். லவ் யூ அப்பா

PC: Selvan Selvan

No comments:

Post a Comment