கோவை சிங்காநல்லூர் வடக்கு அக்ரஹாரத்தில் வீடு வைத்து இருந்தோம். வீடு என்னவோ நானூறு அல்லது நானூற்று ஐம்பது சதுர அடிதான் இருக்கும். ஆனால் நிலம் ஐந்து சென்ட் என் பத்திரம் சொல்லும். வீட்டுக்கு பின்புறம் பெரிய விவசாய கிணறு மற்றும் அதை சுற்றி பத்தடி நிலம் அவரவர் அனுபவித்து கொள்ளலாம்.
அப்படி கொஞ்சம் நிலம் என எங்கள் தோட்டமே ஐந்து சென்ட் இருக்கும். ராமச்சந்திரன் கைக்கு செடிகொடிகள் ஓகோ என்று வளரும். அவரும் வீட்டை சுற்றி நாலு தென்னை, ரெண்டு கறிவேப்பிலை, ரெண்டு கொய்யா, ஒரு பப்பாளி,ஒரு மருதாணி, நாலு வாழைமரம் என்று வீட்டை பசுமையாக பார்த்துக் கொள்வார்.
இது போக ஒரு பக்கம் எழுவது அடி நீளத்துக்கு கல்நட்டு கம்பி வேலி போட்டு இருந்தோம். அத நீளத்துக்கு கொடி காய்கள். தோட்டத்தில் முள்ளங்கி கத்திரிக்காய் சௌசௌ என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இவற்றை மேலும் அழகாக்க எங்கள் அம்மா இரண்டு வாத்து வாங்கி விட்டு இருந்தார். நிலத்தில் ஒரு பிளாஸ்டிக் டப்பை பதித்து அதில் நீர் நிரப்பி விடுவார்கள். அதற்குள் இறங்கி நீந்தி குளிக்கும் வாழ்த்துகளை காண கண் கோடி வேண்டும்.
அனைத்துக்கும் மேலாக பாக்ஸர் இனத்தை சேர்ந்த பயமுறுத்தும் முகம் கொண்ட பயந்தாங்கொள்ளி நாய் வேறு.
அப்போது முன்னேரணும் என்ற மந்திரத்தை தவிர வேறெதுவும் சிந்திக்க இயலாத வயது. மேல் சொன்ன எதையும் யாருமே ரசிக்கவில்லை என் குழந்தைகள் தவிர. மரத்தில் ஏறி குரங்குகள் போல பழம் பறித்த அனுபவம் அவர்களுக்கு உண்டு.
இன்று ஒரே ஒரு காய் கிடைத்தாலும் இங்கே பகிர்ந்து குஷிப் படும் நான் அன்று அத்தனை கட்டு கட்டாய் முருங்கை முதல் முறம் நிறைய கிட்டும் கொய்யாப்பழம் கிளை விட்டு நிற்கும் பப்பாளி மரத்தின் அத்தனை கிளைகள் அவ்வளவு பெரிய பப்பாளி என்ற எதிலும் மனம் லயித்தது இல்லை.
திரும்ப அந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்.
ஏதோ ஒரு படத்தில் துலுக்காணம் என்று அறியப்படும் மகாநதி சங்கர் சொல்வது போல் 'அதுக்கு நிலம் வாங்கோணும். மரம் செடி வெக்கோணும். அது எல்லாம் பலன் தரும் வரை உசுரோட இருக்கோணும்'.
No comments:
Post a Comment